பாலியல் உறவுக்கான ஒப்புதல் வயதை பரிசீலனை செய்ய வேண்டும்!

பாலியல் உறவுக்கான ஒப்புதல் வயதை பரிசீலனை செய்ய வேண்டும்!



யுனிசெஃப் உடன் இணைந்து சிறார் நீதிக்கான உச்ச நீதிமன்றக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட போக்சோ சட்டம் குறித்த இரண்டு நாள் தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் "காதல் வழக்குகள்" அல்லது சம்மதமுள்ள இளம் பருவத்தினர் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடும் வழக்குகளில் POCSO நீதிமன்றங்களின் தீர்ப்புகள்" என்ற தலைப்பு குறித்து  தலைமை நீதிபதி திரு சந்திர சூட் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தியபோது  பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளின் பாதுகாப்பு சட்டத்தில் (போக்ஸோ சட்டம்), பாலியல் உறவுக்கான ஒப்புதல் வயது குறித்து   திருத்தம் செய்ய பாராளுமன்றம் பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.   பாலியல் உறவுக்கான ஒப்புதல் வயது 18 ஆக உள்ளது  இதுபோன்ற வழக்குகளை கையாளும் நீதிபதிகளுக்கு கடினமான கேள்விகளை எழுப்புகிறது, இன்றைய காலகட்டத்தில் இந்த பிரச்சினை கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாக உள்ளதை பாராளுமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது மேலும் அவர் கூறியதாவது:


 "போக்சோ சட்டம் 18 வயதிற்குட்பட்டவர்களிடையே ஒப்புதல் உண்மையாக உள்ளதா என்பதைப் பொருட்படுத்தாமல்,18 வயதிற்குட்பட்டவர்களிடையே உள்ள அனைத்து பாலியல் செயல்களையும் குற்றமாக்குகிறது.   சட்டத்தின் அனுமானம் என்னவென்றால், 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஒப்புதல் தரும் வயது இல்லை என்பதாகும். ஆனால்  இந்த வகை வழக்குகள்  நீதிபதிகளுக்கு கடினமான கேள்விகளை முன்வைக்கின்றன.  இளம் பருவத்தினரின் உணர்வு குறித்து  சுகாதார நிபுணர்களின் நம்பகமான ஆராய்ச்சியின் பார்வையில் பாராளுமன்றத்தால் பரிசீலிக்கப்பட வேண்டிய இப்பிரச்சினை குறித்து தற்சமயம் ஒரு கவலை அதிகரித்து வருகிறது.    POCSO சட்டம் 18 வயது நிறைவடையாதவர் குழந்தை என்று வரையறுத்துள்ளது.  18 வயதுக்குட்பட்ட எவரையும் குழந்தையாக வரையறுக்கும் வரை, நீதிமன்றத்தால் சம்மதத்தின் வயதை வேறு எந்த வகையிலும் விளக்க முடியாது. அதேசமயம், பெருகிவரும் காதல் வழக்குகள் கவலை அளிக்கிறது. ஆனால்,  நீதிமன்றங்கள், சட்டத்தை மீறி  பயணிக்க முடியாது. ஆதலால், உச்ச நீதிமன்றமும் சட்டத் திருத்தத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறது என்று நீதியரசர் கூறியுள்ளார். 


POCSO சட்டத்தின் கீழ் ஒப்புதல் பெறுவதற்கான வயதை தற்போதைய 18 ஆண்டுகளில் இருந்து குறைக்க பாராளுமன்றம் "ஆவலுடன் காத்திருக்கிறது" என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறிய சில நாட்களுக்குப் பிறகு தலைமை நீதிபதியின் இந்த கூற்று வந்துள்ளது. குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கும் காமுகர்களை      தண்டிக்க கொண்டுவரப்பட்ட இந்த போக்சோ சட்டத்தில்                    இன்று வரக்கூடிய 90% வழக்குகள் காதல் விவகாரங்களாகத்தான் உள்ளன. 18 வயதிற்கு குறைவான பெண்ணை காதலிக்கும் இளைஞர்கள் தினந்தினமும் சிறைச்சாலைக்கு சென்று கொண்டுள்ளார்கள். 


சுற்றுச்சூழல் மாற்றம் மற்றும் மாறிவிட்ட உணவு பழக்க வழக்கங்களினால் பெண்கள் வயதுக்கு வரும் காலம் டீன் ஏஜ் வருவதற்கு முன்பே துவங்கி விடுகிறது.  இன்றைய சூழலில் பெண்களும் பையன்களும் 15 வயதிற்கு முன்பே பாலியல் தூண்டலுக்கு ஆளாகிவிடுகிறார்கள்.  தனக்கு விருப்பமான துணையை தேடும் நாட்டம் ஏற்பட்டுவிடுகிறது. இப்படிப்பட்ட சூழலில் பையனும் பெண்ணும் பதின் பருவத்திலேயே       காதலில் விழுந்துவிடுகிறார்கள். ஆனால் போக்சோ சட்டம் அப்படிபட்ட காதலுக்கு  இன்று தண்டனை தரும் சட்டமாகிவிட்டது. இளைஞர்கள் பலர் நல்லவர்களாக இருந்தும் காதலினால் சிறைலில் வாடி   தங்களின் எதிர்காலத்தை இழக்கும் நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர். 


போக்சோ சட்டத்தால் சிறைக்குச் சென்ற ஒரு இளைஞனின் பின்வரும் பாடல் நீதியரசரின் கருத்துக்கு நியாயம் அளிப்பதை உணரலாம்:


காதலுக்கு அச்சச்சோ!

கடிவாளம் போக்சோ!

சந்தோசம் போச்சோ

சிறைவாசம் ஆச்சோ!

நீதானே சிரித்தாய்! 

நீதானே அழைத்தாய்! 

தரைமீது மீனாய் தத்தளித்து துடிக்க 

அப்பன் சொன்ன பேச்சுக்கு 

அடிமாடாய் போனாய்!

கனவெல்லாம் கற்பனை!

காதலுக்கு தண்டனை!


அம்மா அப்பா கொதித்திட

அக்கா தங்கை குமுறிட, 

நண்பரெல்லாம் அழுதிட, 

நான் இருக்கேன் கூண்டுக்குள்ளே!

படிக்கும் கனவு பாழாப்போச்சி!

வாழும் நம்பிக்கை வீணாப்போச்சி!

ஆக நினைத்தேன் அறிவாளி! 

ஆகிவிட்டேன் குற்றவாளி!


வறட்டு கௌரவ அப்பனுக்கு வரப்பிரசாதமானது!

சாதி ஆணவகாரனுக்கு 

தண்டாயுதமானது!

இளவயது காதல் இன்பம் தராது!

இலக்கில்லாத பயணம் ஊர் சேராது!


சுறா பிடிக்கும் வளையிலே 

இறாவெல்லாம் மாட்டுது!

புலி பிடிக்கும் வளையிலே 

எலியெல்லாம் மாட்டுது!

காம அரக்கரை தூக்கில்  போடுங்க!

காதல் கிளிகளை வாழவிடுங்க!


படிக்கும் காலத்தில் படியுங்க! 

பாழும் காதல் வேண்டாங்க! 

நல்ல வேலை தேடுங்க! 

நாடிவரும் வாழ்வுங்க!

மாட்டிகிட்டவன் சொல்றங்க! 

மானத்தோடு வாழுங்க!


இப்படி 18 வயதிற்குட்பட்ட இளம் பெண்களை காதலித்து சிறையில் வாடும் இளைஞர்களுக்கு விடிவு தரும் வகையில் இவர்களுக்கு விதி விலக்கு தரும் சட்ட திருத்தம் வரும் என்ற நாமும் நம்பிக்கையோடு காத்திருப்போம். 


- விடியல் குகன் (எ) கு. கருணாநிதி, 

மேனாள் மாவட்ட நீதிபதி, 

நல்லோர் வட்ட சட்டத்துறை பொறுப்பாளர்,

விடியல் சட்ட சேவை மையம், நாமக்கல்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

Comments