நாமக்கல் மாவட்ட விடியல் சட்ட சேவை மைய தொடக்க விழா அறிக்கை: நா


நாமக்கல் மாவட்ட விடியல் சட்ட சேவை மைய தொடக்க விழா அறிக்கை:

நாட்டிலுள்ள எண்ணற்ற வழக்கறிஞர்கள் நாட்டின் சட்டத் தேவையை நிறைவேற்றி வருகிறார்கள். அதைக் குறை கூறவோ,  குறைத்து மதிப்பிடவோ முடியாது. ஆனால் அவர்கள் தங்கள் பணிகளை தனித்தனியாக அவர் அவர்களுக்கு உரிய அளவுக்கு செய்து வருகிறார்கள். அது மக்களுக்கு முழு நிறைவைத் தராததாக, சட்டத்தின் பால் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தாததாக உள்ளது. காவல் நிலையத்திற்கு புகாதாரராயினும், குற்றம் சாட்டப்பட்டவராயினும் எவருமே அச்சமின்றி அணுகுவது இயலாததாக உள்ளது. அரசு அலுவலகங்களில் சாதாரண மக்கள் விரைவான சேவையை பெறுவது அரிதாகவே உள்ளது. நீதிமன்றங்களில் நீண்ட காலம் அலைக்கழிக்கப்படும் நிலையே தொடர் கதையாக உள்ளது. மாற்றுத் தீர்வத்தின் தேவை நன்கு உணரப்படுகிறது.  இத்தகைய  நிலையை மாற்றி  அச்சமற்ற, சுமுகமான, நம்பிக்கையான  நிலையை ஏற்படுத்துவதற்கு சட்ட ஆர்வலர்கள் மாநில அளவில் அமைப்பு ரீதியாக  ஒருங்கிணைந்து செயல்படுவது நல்ல பலனை வழங்கும் என்பது திண்ணம். 

அதன் அடிப்படையில் ஆங்காங்கே உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட ஆர்வலர்களை ஒருங்கிணைத்து சட்ட சேவை மையங்களை மாவட்டம் தோறும் அமைத்து மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு, சட்ட ஆலோசனை மற்றும் சட்ட உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்கனவே இருந்து வந்தது. 5.11.2022 ல் திரு. நல்லோர் வட்ட பாலு ஐயாவின் நாமக்கல் வருகை அந்த எண்ணத்தின் முதல் புள்ளியை வைப்பதற்கான நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. நாமக்கல் மாவட்ட விடியல் சட்ட சேவை மையத்தின் தொடக்கத்தை உடனடி நிகழ்வாக்கியது.

மேற்படி நிகழ்ச்சி நேற்று 5 11 2022 திட்டமிட்டபடி நாடு முழுவதும் உள்ள  நல்லோர்களை இணைக்கும் நற்பணியை ஓய்வின்றி நாள்தோறும் செய்துவரும் மதிப்புமிக்க திரு. நல்லோர் வட்ட பாலு ஐயாவின் திருக்கரத்தால் நேற்று மாலை 4 மணி அளவில் தொடங்கியது. 

அன்புமிக்க ஊக்குவிப்பு பேச்சாளர், பேச்சுப் பயிற்சி ஆசிரியர் சிறப்புமிகு திரு சிவராஜ் அவர்கள் வரவேற்று நிகழ்ச்சியை நெறிப்படுத்த, பசுமையான நாமக்கல்லை உருவாக்க எப்போதும் பக்குவமாக செயல்பட்டு வரும் சமூக சேவகர் திரு  தில்லை சிவகுமார் நிகழ்ச்சியை துவக்கி வைத்து முன்னிலை வகிக்க, விடியல் குகன் என்ற மேனாள் மாவட்ட நீதிபதி கு கருணாநிதி ஆகிய நான் விடியல் சட்ட சேவை மையத்தின் மேற்படியான நோக்கத்தை எடுத்துக் கூறி தலைமை உரையாற்ற, அன்புமிக்க நாமக்கல் வழக்கறிஞர்கள் திரு சங்கர், திரு பாஸ்கர், திரு. சக்திவேல் போன்றோர் கலந்து கொண்டு சிறப்பிக்க, ஸ்ரீராம் நிதி நிறுவன அலுவலர்கள் பங்கு பெற்று சிறப்பிக்க, அன்புமிக்க நண்பர்கள் திரு ராமசாமி, திரு. ராஜேஷ்குமார், நல்லோர் வட்ட மகளிர் குழுவினர், இன்னும் பல சமூக சேவகர்கள், சட்ட ஆர்வலர்கள் கலந்துகொண்டு மகிழ்விக்க, மதிப்புமிக்க நல்லோர் வட்ட திரு பாலு ஐயா அவர்கள் நல்லோர்கள் ஒருங்கிணைந்து வருவதில் ஒளிமயமான எதிர்காலம் கண்ணில் தெரிவதை எடுத்துக்காட்டி சிறப்புரையாற்ற, அன்புமிக்க நண்பர் திரு மாரிமுத்து அவர்கள் நன்றி உரை ஆற்ற, நாமக்கல் மாவட்ட விடியல் சட்ட சேவை மையம் இனிதே தொடங்கியது.

இம்மையம் இனிதே தனது சேவையை தொடரவும், மாவட்டம் தோறும் சேவை மையம் தொடங்கி விரிவுபடுத்தி பயனுள்ள பணியாற்ற வும் அன்புமிக்க  அனைவரின் அன்பையும் ஆதரவையும் எதிர்நோக்கி காத்திருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன். அனைவருக்கும் மிக்க நன்றி! வணக்கம்!

Comments