கோவை விடியல் சட்ட சேவை மைய தொடக்க விழா


கோவை விடியல் சட்ட சேவை மைய தொடக்க விழா.


அன்புமிக்க அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

நேற்று 22 11 2022 ஓர் அருமையான தினமாக அமைந்தது!

விடியல் சட்ட சேவை மையத்தின் கோவை மாவட்டக் கிளை தொடங்கியது!

திட்டமிட்டபடி மாலை 4 மணி அளவில் நிகழ்ச்சி தொடங்கியது!

பம்பரம் போல் சுற்றி சுழன்ற விடியல் சட்ட சேவை மையத்தின் மாநில துணை அமைப்பாளரும், கோவை வழக்கறிஞருமான அருமை சகோதரர் திரு. மு. உமர் ஷெரிப் அவர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேச, மாவட்டந்தோறும் கிளை பரப்பி மாநிலம் முழுவதும் சட்ட விழிப்புணர்வு, சட்ட ஆலோசனை, சட்ட உதவி என்னும் மூவிதப் சட்ட சேவைப் பணிகளை மக்களுக்கு  செய்வதின் மூலம் சட்டத்தின் ஆட்சியையும், சமூக நலனையும் பேணிப் பாதுகாப்பதே விடியல் சட்ட சேவை மையத்தின்  நோக்கம் என்பதை எடுத்துக் கூறி சட்ட சேவை மையத்தின் மாநில அமைப்பாளர்  மேனாள் மாவட்ட நீதிபதி திரு கு. கருணாநிதி அவர்கள் தலைமை உரையாற்ற, ஒற்றுமை உடையது சமுதாயம் எனவும், ஒற்றுமையே வலிமை எனவும், சட்ட சேவைக்கும் அப்பால் சமூக நலனுக்காக சமூக பொறுப்பேற்று வழக்கறிஞர்களும் சமூக, சட்ட ஆர்வலர்களும் ஒருங்கிணைய வேண்டும் என்பதை வலியுறுத்தி நல்லோர் வட்ட திரு. பாலு ஐயா அவர்கள் துவக்க உரையாற்ற, மக்கள் நலனுக்கான  சமூக சேவையே மன மகிழ்வும், மனவு நிறைவும் தருவது ஆகும் என்று இந்நிகழ்ச்சிக்கு நங்கூரமாக அமைந்து செயல்பட்ட பலகலை வித்தகர் பொறியாளர் திரு. சேது. பழனிக்குமார் அவர்கள்,   சீர்கெட்ட சமூகத்தை சீர்படுத்தும் சிறந்த முயற்சியில் வழக்கறிஞர் சமுதாயம் ஈடுபடுவதற்கு விடியல் சட்ட சேவை மையம் நம்பிக்கை ஊட்டுவதாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்த கோயமுத்தூர் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் திரு. ப. சு. சிவசாமி (எ) தமிழன் அவர்கள், சட்ட சேவைகள் மூலம் சமூகப் பணியாற்ற முனைந்துள்ள விடியல் சட்ட சேவை மையத்தின் சிறந்த நோக்கத்திற்கு வழக்கறிஞர் சமுதாயம் இணைந்து நிற்கும் என்று உறுதியளித்த கோயமுத்தூர் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் வழக்கறிஞர் திரு. க. கலையரசன் அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, வேற்றுமையில் ஒற்றுமை என்பதே உயர்ந்த கலாச்சாரம் எனவும், மனித நேயமே மகத்தான சேவை எனவும், நாமெல்லாம் இந்தியர்கள் என்று ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து நிற்பதோடு நாமெல்லாம் மனிதர்கள் என்பதையும் மறந்து விடாமல் மக்கள் பணி ஆற்றுவோம் என்று நகைச்சுவை மற்றும் நல்ல பல கருத்துக்களோடு மேனாள் மாவட்ட நீதிபதி திரு. முகம்மது ஜியாவுதீன் அவர்கள் சிறந்ததொரு சிறப்புரை ஆற்ற, கோவை மாவட்ட விடியல் சட்ட சேவை மையத்தின் வழக்கறிஞர் திருமதி. கா.சு. லலிதா அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள்,  சட்ட ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள்  அனைவருக்கும் நன்றி நவில கோவை விடியல் சட்ட சேவை மையம் மக்கள் மனதில் மகுடமாய் திகழ மக்கள் பணியாற்ற மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இனிதே தொடங்கியது.

Comments