நாமக்கல் டிரினிட்டி மகளிர் கல்லூரியில் அரசியலமைப்பு தின விழாவில் விடியல் குகனின் சிறப்புரை

 



நாமக்கல் டிரினிட்டி மகளிர் கல்லூரியில் அரசியலமைப்பு தின சிறப்புரை


அரசியல் அமைப்பு தினம் என்னும் இந்த நாள் ஓர் இனிய நாள்!


1949 நவம்பர் 26 ஆம் நாள்! 


இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாள்!

அதனை நினைந்து பார்க்கத்தான் இன்று நாம் இங்கு கூடி உள்ளோம்!


அந்த நாளின் மகத்துவம் என்ன தெரியுமா?


இம்மென்றால் சிறைவாசம் ஏனெனில் வனவாசம்;

இவ்வாறிங்கே செம்மையெல்லாம் பாழாகிக் 

கொடுமையே அறமாகி தீர்ந்த போதில், 

என்ற தனியும் இந்த சுதந்திர தாகம்?

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

என்றெமதன்னை கைவிலங்குகள் போகும்?

என்றெம தின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?

என்று பாரத மக்கள் சுதந்திர தாகம் கொண்டு

குடிமக்கள் சொன்னபடி குடி வாழ்வு 

மேன்மையுற வேண்டும் என்பதற்காக, 


பகத்சிங், சுகதேவ், குருதேவ் போன்ற இளைஞர்கள் எழுச்சி போராட்டம் நடத்தினர். 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கி

வெள்ளையர்களை ஆயுதம் கொண்டு விரட்ட, 

கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது 

சத்தி யத்தின் நித்தி யத்தை நம்பும் யாரும் சேருவீர்

என்று அண்ணல் காந்தி அவர்களின் அறைகூவலை ஏற்று

எண்ணற்ற மக்கள் அஹிம்சை வழியில் போராடி 

அடிபட்டு உடைபட்டு மிதிபட்டு இன்னுயிரை ஈந்ததின் பயனாய்

15.8.1947 நள்ளிரவில் இந்தியாவின் சுதந்திர தாகம் தீர்ந்தது. 


அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் என்று சுதந்திர உரிமைகளுக்காக நமது இந்திய மக்கள் குரல் கொடுத்து கொண்டிருந்த நேரம் அவர்கள் மனதில் எத்தனையோ ஆசை அபிலாசைகள்!


வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்!

அடி மேல் கடல் முழுதும் கப்பல் விடுவோம்!

பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்!

எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்!


சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்!

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்!

வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளில் பயிர்செய்வோம்!


காவியம் செய்வோம்! நல்ல காடு வளர்ப்போம்!

கலைவளர்ப் போம்! கொல்ல ருலைவளர்ப் போம்!

ஓவியம்செய் வோம்! நல்லஊசிகள் செய்வோம்!

உலகத் தொழிலை முவந்து செய்வோம்!


ஆயுதம் செய்வோம்! நல்ல காகிதம் செய்வோம்!

ஆலைகள் வைப்போம்! கல்வி சாலைகள் வைப்போம்!

ஓயுதல் செய்வோம்! தலை சாயுதல் செய்வோம்!

உண்மைகள் சொல்வோம்! 

பல வண்மைகள் செய்வோம்!

என்று பல விதமாய் அடிமை இந்தியாவில் வாழ்ந்த போது சுதந்திர இந்தியா பற்றி கண்ட கனவுகளை நனவாக்குவதற்காக நாம் உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்ட நாள்!

26.11.1949.


இந்தியாவின் வருங்காலம் என்னும் அரண்மனையை கட்டி எழுப்புவதற்காக அடித்தளம் இட்ட நாள்!


70 ஆண்டுகளுக்கு மேலான சுதந்திர இந்தியா இதுநாள் வரையிலும் மக்களாட்சி குடியரசாக நின்று நிலைத்திருப்பதற்கு அடிப்படையாய் அமைந்த நாள்!


அன்றைய நாள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நமது அரசியல் அமைப்புச் சட்டம் அது வரையிலும் மக்களின் நலனுக்காக சிந்தித்த பற்பல தலைவர்களின் கனவுகளை ஒன்று திரட்டி இந்தியர்களின் வாழ்வாக்கிய நாள்!


நமது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உண்மையிலேயே உலகமே வியந்து பார்க்கக்கூடிய ஓர் அற்புத சட்டமே!


இந்தியர்களின் கனவை எப்படி நிறைவேற்றுவது?

பெற்ற சுதந்திரத்தை எப்படி பேணி காப்பது? 

கடைக்கோடியில் உள்ள மனிதனின் கண்ணீரையும் எப்படி துடைப்பது? 


அதற்கு சட்டம் வேண்டுமே! தகுந்த திட்டம் வேண்டுமே!


அதனை வழங்கியதுதான் 

அரசியல் நிர்ணய சபை!


இந்தியாவின் மக்களாகிய நாங்கள் இந்தியாவை ஒரு சுதந்திரமான, சமுதாயநலம்நாடும், சமயச்சார்பற்ற, சமஉரிமைக் குடியரசு நாடாக அமைக்க மனமார்ந்து முடிவுசெய்து, அதன் குடிமக்கள் எல்லோருக்கும் சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் நியாயமும், எண்ணத்தில், வெளிப்பாடுகளில், நம்பிக்கையில், மதம் மற்றும் வழிபாடுகளில் சுதந்திரமும், சமூகநிலையில் மற்றும் வாய்ப்புகளில் சமத்துவமும் கிடைக்கச் செய்யவும், ஒவ்வொரு மனிதனின் மதிப்பையும் நாட்டின் ஒருமையையும் முழுமையையும் காக்கும்வண்ணம் அவர்கள் அனைவரிடமும் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கவும் நம் அரசியல் அமைப்பு உருவாக்கும் அவையில் இந்த 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளில் இங்ஙனம் இந்த அரசாங்க சாசனத்தை இயற்றி, எங்களுக்கே தந்து, ஏற்றுக்கொள்கிறோம் என ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்!

இந்திய அரசியலமைப்பு என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். அம்பேத்கர், ஜவகர்லால் நேரு, இராஜகோபாலாச்சாரி, இராஜேந்திரபிரசாத், சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய சட்டவரைவுக் கூட்டம், 1946ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி முதல் முறை கூடியது. இக்குழுவின் தலைவராக இராஜேந்திரபிரசாத் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இந்தியச் சட்டங்களின் தந்தை என்று போற்றப்படுபவர் அம்பேத்கர் அவர்களே! 


உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது. இது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள், மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. இது தான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 22 பகுதிகள், 465 பிரிவுகள் 12 அட்டவணைகள், 100க்கு மேற்பட்ட திருத்தங்கள்  உள்ளன.


இந்திய அரசியலமைப்பின் முகப்புரை(preamble)யில், " இறையாண்மை உடைய ஜனநாயக, சமதர்ம, சுதந்திரக் குடியரசு" என்றும் " இpந்திய யூனியன்" என்றும் இந்தியா பெயரிடப்பட்டுள்ளது.  இதில் இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டிருந்தாலும், பின்பு அடிப்படைக் கடமைகளும் உருவாக்கப்பட்டன. இந்திய அரசமைப்பின் தனிச் சிறப்புக்களில் 'அடிப்படை உரிமைகளும்' அடங்கும்.

இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்படும் போது, பல்வேறு நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களின் கூறுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. 'கூட்டாட்சி முறையை' கனடாவில் இருந்தும், 'அடிப்படை உரிமைகள்' அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் இருந்தும், அடிப்படைக் கடமைகளை அன்றைய சோவியத் யூனியனிடமிருந்தும் பெற்றது. அரசியல் சட்டத்திருத்த முறையை தென் ஆப்ரிக்காவிடம் இருந்தும், ராஜ்யசபா நியமன எம்.பி.,க்கள் முறையை அயர்லாந்திடம் இருந்தும் பெற்றது.

இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 29 ஆகஸ்ட் 1947 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த, தன்னாட்சி கொண்ட, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது. நடைமுறைக்கு வந்த பிறகு, அதுவரை நாட்டின் அடிப்படை நிருவாக ஆவணமாக இருந்த இந்திய அரசு சட்டம், 1935 என்னும் சட்டத்திற்கு பதில் இந்திய அரசியலமைப்பு நாட்டின் அடிப்படை நிர்வாக ஆவணமாக மாற்றியது. அரசியலமைப்புக்கு வலுசேர்க்கும் விதமாக 1976 ல் நடைபெற்ற திருத்தங்களில் இந்தியா பொதுவுடைமை, மதச்சார்பின்மை மற்றும் நேர்மை இவைகளை தன் கொள்கைகளாக அறிவித்தது. இந்தியா தனது அரசியலமைப்பின் ஏற்பை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதியை குடியரசு நாளாகக் கொண்டாடுகிறது. இந்தியாவின் சட்ட நாள் The Constitution Day of India, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. 


பகுதி 3 (உட்பிரிவு 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.


பகுதி 4 (உட்பிரிவு 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.


பகுதி 4A ( உட்பிரிவு 51 A) அடிப்படைக் கடமைகள்.(1976-ஆம் ஆண்டு 42-ஆவது திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது)


சிறப்பம்சங்கள்:


அடிப்படை உரிமைகள்


12-ஆவது பிரிவு முதல் 35-ஆவது பிரிவு வரை உள்ள மூன்றாவது அத்தியாயத்தில் இந்தியரின் அடிப்படை உரிமைகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. அவர்கள்:


இந்தியாவிற்குள் அனைவரும் சம பாதுகாப்பு (பிரிவு-14)

வேறுபாடின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் (பிரிவு-15)

பொதுவேலைவாய்ப்பில் சம வாய்ப்பு (பிரிவு-16)

தீண்டாமை ஒழிப்பு (பிரிவு-17)

பட்டங்கள் ஒழிப்பு (பிரிவு-18)

ஏழு சுதந்திரங்கள் (பிரிவு-19 முதல் 22)

சமய உரிமை (பிரிவு 25-28)

சிறுபான்மையினரின் பண்பாட்டு,கல்வி உரிமை (பிரிவு 29-30)

இவ்வுரிமைகளைக் காத்துக் கொள்ள உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் உரிமை (பிரிவு-32)

ஆகியன முக்கியமானவையாகும். நெருக்கடி நிலையின் போது தற்காலிகமாக அடிப்படை உரிமைகள் நீக்கப்படும். ஆனால் நெருக்கடி நிலை ரத்தானதும் அடிப்படை உரிமைகள் தானாக அமலாகிவிடும்.


இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படைக் கடமைகள்


1. அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டு தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்தை மதிக்க வேண்டும்.


2. சுதந்திரத்திற்கான நமது தேசியப் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த உன்னத இலட்சியங்களைப் போற்றவும் பின்பற்ற வேண்டும்.


3. இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு  ஆகியவற்றை நிலைநிறுத்தவும் பாதுகாக்க வேண்டும்.


4. நாட்டைக் காப்பதுடன், தேவையான போது நாட்டு நலப்பணிகளையும் செய்தல்.


5. அனைவரும் சாதி,மத,மொழி,இன,எல்லை கடந்த சகோதர மனப்பான்மையை உருவாக்க வேண்டும்.


6. நமது கூட்டுக்கலாச்சாரத்தின் பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்


7. காடுகள், நதிகள், ஏரிகள் உள்ளிட்ட இயற்கை வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும்.


8.அறிவியல், மனிதாபிமானம், சீர்திருத்த உணர்வுகளை வளர்க்க வேண்டும்


9. வன்முறையைத் தவிர்த்து அரசு சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்.


10. தனிப்பட்ட அளவிலும் கூட்டுத் செயற்பாட்டிலும் மிகச் சிறந்த நிலையை அடைய முயலுவதன் மூலம் நாட்டின் மேம்பாட்டிற்கு முயற்சிக்க வேண்டும்.


11. 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கல்விக்கான வாய்ப்பை வழங்குதல்.

   


அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்:


இந்தியாவிலுள்ள ஒன்றியம் மற்றும் மாநில அரசுகள் மக்களைப் பாதுகாத்து நல்வழிப்படுத்துதல், எந்தக் கோட்பாடுகளை உள்ளடக்கிய சட்டங்கள் இயற்ற வேண்டும் என்பது அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் (Directive Principles) ஆகும். இது பற்றி நான்காம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லோருக்கும் போதுமான வாழ்க்கை வசதிகள், வயதுக்கும் வேலைக்கு ஏற்ற பொருத்தமான வேலை, வேலைக்கு ஏற்ற சூழ்நிலை, ஏற்ற வயது வரை இலவச கட்டாயக் கல்வி, பொது சுகாதாரம், மது விலக்கு, வேளாண்மை வளர்ச்சி, வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு ஆகியன சிலவாகும்.


இக்கோட்பாடுகள் யாவும் அறிவுரைகளே; இவற்றைச் செயல்படுத்தக் கோரி அரசுகள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது.


கூட்டாட்சி அமைப்பு


அரசியலமைப்பு ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிகாரங்களை பகிர்ந்து கொள்கிறது. இது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் அதிகாரங்களின் மூன்று பட்டியல், அதாவது ஒன்றிய அரசுப் பட்டியல், மாநிலப் பட்டியல் மற்றும் உடன்நிகழ்கிற பட்டியல் என பிரிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை, நாணய வழங்கல் போன்ற விடயங்கள் ஒன்றியப் பட்டியலில் ஒதுக்கப்பட்டுள்ளன. பொது ஒழுங்கு, உள்ளூர் அரசாங்கங்கள், சில வரிகள் ஆகியவை மாநிலப் பட்டியலில் உள்ளன. 


நாடாளுமன்ற மக்களாட்சி


இந்திய குடியரசு தலைவர், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுபவர்.நேரடியாக மக்களால் கிடையாது. நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் நிர்வாகம் மற்றும் சட்டங்கள் அனைத்தும் அவர் பெயரில் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் இந்த அதிகாரங்கள் பெயரளவுக்கு மட்டுமே உள்ளன, குடியரசு தலைவர் பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் படி தான் செயல்பட வேண்டும். இதே போன்ற ஒரு அமைப்பு, நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்,முதல்வர் மீதும் அமைச்சர்கள் மீதும் தங்கள் கட்டுப்பாட்டை செலுத்தும் முறை தற்போது மாநிலங்களில் உள்ளது.


சுதந்திரமான நீதித்துறை


இந்திய நீதித்துறை, நிர்வாகிகள் முதல் நாடாளுமன்றம் வரை அதன் கட்டுப்பாட்டை செலுத்த முடியும். நீதித்துறை அரசியல் பொருள் விளக்குபவராக செயல்படுகிறது. இரு மாநிலங்களுக்கு இடையிலோ,ஒரு மாநிலத்துக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையிலோ பிரச்சினைகளில் நடுநிலையாளராக செயல்படும். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இயற்றப்பட்ட சட்டம் நீதிமுறை மேலாய்வுக்கு உட்பட்டது. அந்த சட்டம் அரசியலமைப்பு விதிகளை மீறுகிறது என்று நினைத்தால் நீதித்துறை அரசியலமைப்பில் அல்லாததாக அறிவிக்க முடியும்.


சட்டங்களின் நீதிமுறை மேலாய்வு


நீதிமுறை மேலாய்வை அமெரிக்காவின் அரசியலமைப்பிலிருந்து இந்திய அரசியலமைப்பு பயன்படுத்தப்பட்டது. நீதிமன்ற உறுப்புரை 13 கீழ் நீதிமுறை மேலாய்வு செயல்படுகிறது. நீதிமன்ற அரசியலமைப்பு நாட்டின் உச்ச சக்தி மற்றும் அனைத்து சட்டங்களும் அதன் மேலாதிக்கத்தின் கீழ் என்பதைக் குறிக்கிறது. 


அறிவியலும் பண்பாடும் வளர்ந்த நாகரிக நிலையிலும் பெண்களின் முன்னேற்றத்தை சமுதாயம் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளாத நிலையைப் பார்க்கிறோம்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் என்று மகாகவி பாரதியார் கூறியபடி, இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் படித்து பட்டங்களை பெற்றுள்ளனர். சட்டசபைகளிலும் நாடாளுமன்றங்களிலும் இடம் பெற்றுள்ளனர். நாடாளும் நிலைக்கு உயர்ந்துள்ள பெண்கள், கடந்து வந்த தடைகள் நிறைந்த பயணத்தை சிந்திப்போம். சங்க காலத்தில் மகளிரும் ஆடவருக்கு இணையாய் கல்வியறிவு பெற்று விளங்கினர். இருபெரு வேந்தருக்கு தூதுவராக செல்லும் அறிவாற்றல் படைத்த புலவராக அவ்வையார் விளங்கினார். ஆனால் இடைக்காலம் பெண்களின் இருந்த காலம் எனலாம். மதவாதிகள் மூடநம்பிக்கைகளை புகுத்தி பெண் கல்விக்கு தடை விதித்தனர்


ஆணுக்கு பெண் அடிமை என்ற நிலை உருவாயிற்று. பெண்கள் அஞ்சி, அடங்கி, ஒடுங்கி வாழ்ந்தனர். அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன. சமுதாயத்தின் கண்ணாக போற்றப்பட்ட பெண்கள் தாழ்ந்த நிலையை அடைந்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உடன்கட்டை ஏறும் கொடுமை ஒழிந்தது. விதவைத் திருமணம் சட்டப்படி ஏற்கப்பட்டது. பெண்கள் கல்வி கற்கவும், வேலை பார்க்கவும் அனுமதிக்கப்பட்டனர். கடந்த தொடக்கம் பெண்களின் மறுமலர்ச்சி காலமாக அமைந்தது. இம்மண்ணில் தோன்றிய சமுதாயச் சிந்தனையாளர் பலர் பெண் அடிமைக் கொடுமைகளை எதிர்த்துப் போராடினர். அதன் பயனாய் இன்று சம உரிமை பெற்றனர். பெண்கள் பட்டம் பெற்று பெரும் பதவிகளை ஏற்றுள்ளனர்.


1975-ம் ஆண்டு அகில உலக பெண்கள் ஆண்டாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. தொட்டிலை ஆட்டுங்கை தொல்லுலகையும் ஆளும் என்பதை இன்று நாம் கண்கூடாகக் காண முடிகிறது. தன்னைச் சுற்றிலும் இருப்பவர்கள் எது செய்தாலும் சரியே என்று கருதும் நிலையில் இருந்து விடுபட்டு, தனக்கு எதிராக பிறர் செய்யும் செயலை விமர்சிக்கும் துணிவு பெற்று வாழும் மனப்பக்குவத்தை இன்றைய பெண்கள் அடைந்துள்ளனர். அறிவியலும் பண்பாடும் வளர்ந்த நாகரிக நிலையிலும் பெண்களின் முன்னேற்றத்தை சமுதாயம் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளாத நிலையைப் பார்க்கிறோம். இந்நிலை மாறவேண்டும். ஆடவரிடையே மட்டுமின்றி பெண்கள் மனதிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். பெண் என்பவள் அடிமையானவள் இல்லை என்பதை இருபாலரும் உணரவேண்டும். தலைசிறந்து விளங்கிய ஒவ்வொரு ஆணுக்கும் பின்னால் இருந்து சக்தியாக பெண் இருக்கிறாள் என்பது உலகறிந்த உண்மை. அதனால் நாடு முன்னேற அவசியம் மகளிர் முன்னேற்றம் அடையவேண்டும். அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்கும் வகையில் பல்வேறு வழிவகைகளை மேம்படுத்த வேண்டும்.


நமது தேச தலைவர்கள் பல்வேறு அரசியல் அமைப்பு சட்டங்களையும் நன்கு பரிசீலித்து, நமது அரசியல் அமைப்பு சட்டம் அனைத்தையும் விட மேலானதாக இருக்க வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பல்வேறு அரசியல் அமைப்பு சட்டங்களின் நல்ல அம்சங்களை எடுத்து, ஒருங்கிணைத்து, இந்தியாவின் தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப சிறப்பாக உருவாக்கி அளித்துள்ளனர். அதனால்தான் பல்வேறு நாடுகளின் அரசியல் அமைப்பு சீர்குலைந்து சர்வாதிகார ஆட்சிக்கு சென்று கொண்டுள்ள நிலையில், நமதுநாடு சட்டத்தின் ஆட்சிவழியே குடியரசு நாடாக தொடர்ந்து நிலைத்து நிற்கிறது. சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை களைந்து முன்னேறும் பாதையில் பீடு நடைபோட்டு வருகிறது. நமது அரசியல் அமைப்பின் சிறப்பம்சங்களாக சட்டத்தின் ஆட்சி, அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரமான நீதித்துறை ஆகியன அமைந்துள்ளன. இந்தியா மதச்சார்பற்ற சமதர்ம ஜனநாயக குடியரசாக தொடர்ந்து நிலைபெற்றுள்ளது. 

இந்தியாவை நல்லதொரு பாதையில் இட்டுச்செல்லும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிறப்புமிக்க நமது தேசத் தலைவர்களுக்கு நன்றி கூறும் விதமாக இந்தச் சட்ட நாள் என்னும் அரசியல் அமைப்பு தினத்தில் அதன் நோக்கங்களை வெற்றியடையச்செய்வோம் என்பதை உறுதி கொள்வோம்!


- *கு. கருணாநிதி, எம்.ஏ.எம்.எல்., மேனாள் மாவட்ட நீதிபதி, விடியல் சட்ட சேவை மையம், நாமக்கல்.*

Comments