கோவை விடியல் சட்ட சேவை மைய துவக்க விழாவில் விடியல் குகனின் தலைமையுரை:


கோவை விடியல் சட்ட சேவை மைய துவக்க விழாவில் விடியல் குகனின் தலைமையுரை:


ஒரு தனி மனிதர் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். அதனால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மனிதன் ஒரு சமுதாய விலங்கு. சமுதாயத்தில் கலந்து இருந்துதான் வாழ வேண்டும். இல்லாவிட்டால் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. மனிதன் சமுதாயத்தோடு சேர்ந்து வாழ்கின்ற போது ஒரு ஒழுங்கு முறை தேவை. ஒரு ஒழுங்கு முறை இல்லை என்றால் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு மனித குலமே அழிந்து விடும். மனித குலம் அழிந்து விடாமல் நிலைபெற்றிருக்க அந்த ஒழுங்குமுறை அவசியமாகிறது. 

இதை இதைச் செய்யலாம். இதை செய்யக்கூடாது என்று ஒரு ஒழுங்கு முறை வகுக்க வேண்டி உள்ளது. அந்த ஒழுங்கு முறையை முதலில் தர்மம் என்று அழைத்தார்கள். பிறகு அந்த தர்மம் சட்டம் என்ற பெயரில் உறுதிப்படுத்தப்பட்டது. கரைபுரண்டு ஓடும் காற்றாற்று வெள்ளத்திற்கு இருபுறமும் கரையிட்டு கட்டுப்படுத்துவது போன்று சமுதாயத்தில் வாழும் மனிதர்களின் கட்டுப்பாட்டில் வாழ வகுக்கப்பட்ட கரைதான் சட்டம். சுவர்படத்திற்கு 4 சட்டம் இருப்பதுபோல் வீட்டிற்கு நான்கு சுவர் இருப்பதுபோல் சட்டம் மனிதர்களை சூழ்ந்துகொண்டு உள்ளது. மனிதர்கள் சட்டத்திற்கு உட்பட்டு தான் வாழ வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக வாழ்கின்ற போது தண்டனை பெறவும், நஷ்டப்படவும் நேருகிறது. 

சட்டம் குற்றங்களையும் தண்டனைகளையும் மட்டும் வரையறுப்பதில்லை. உரிமைகளையும் கடமைகளையும் கூட வரையறுக்கிறது.உரிமையும் கடமையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது. ஒருவரின் உரிமை மற்றவர்களுக்கு கடமையாகிறது. ஒருவரின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்றால் மற்றவர்கள் அந்த உரிமையை மதித்து நடக்க வேண்டும். அதுபோல் ஒவ்வொருவருடைய உரிமையும் மற்றவர்களால் மதித்து பாதுகாக்கப்பட வேண்டும். ஆதலால் ஒருவரின் உரிமை மற்றவரின் கடமையாகிறது. மற்றவர்களின் கடமையிலிருந்துதான் ஒருவரின் உரிமை நிலைநாட்டப்படுகிறது. இந்த உரிமையும் கடமையும் சரிவர நடப்பதற்கு சட்டத்தின் ஆட்சி அவசியமாகிறது. சட்டப்படியாக எல்லோரும் நடந்து கொள்ளும் போதுதான் மனிதர்களின் உரிமைகளும் கடமைகளும் முரண்படாமல் ஒருங்கிணைந்து செல்ல முடியும். 

சட்டத்தின் ஆட்சி என்பது நல்ல சமுதாயம் அமைவதற்கு மிகவும் அவசியமானதாகும்.மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில் ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களின் அபிலாசைகளைப் புரிந்த மக்கள் பிரதிநிதிகளால் தான் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. அதனால் நமது நாட்டின் சட்டங்கள் பெரும்பாலும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டதாகத்தான் உள்ளன. குறிப்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்கள் நலனைக் கொண்டு சிறப்பாக அமைந்துள்ள சட்டமாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்ட மக்கள் மன்றம், அரசு நிர்வாகம், நீதித்துறை மற்றும் பத்திரிக்கை உட்பட ஊடகங்கள் ஆகிய நான்கும் ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் எனச் சொல்லப்படுகின்றன. அதில் மூன்று தூண்களை உருவாக்குவது பற்றிய விதிகளை அரசியல் அமைப்புச் சட்டம் வடித்துக் கொடுத்திருக்கின்றது. நமது அரசியல் அமைப்புச் சட்டம் அடிப்படை உரிமைகளையும் அடிப்படைக் கடமைகளையும் அரசுக்கு வழிகாட்டு நெறிமுறைகளையும் கூட உருவாக்கியுள்ளது. இவை எல்லாம் மக்கள் நலனைக் காப்பதற்காக சிறப்பான ஏற்பாடாகும். 

இந்தியா இறையாண்மை உள்ள, சமதர்ம, சமய சார்பற்ற, மக்காளாட்சிக் குடியரசு என்று அரசமைப்பு முகப்புரை கூறுகிறது. அரசமைப்பின் நோக்கத்தையும் முகப்புரை விளக்குகிறது. சமுதாய, அரசியல், பொருளாதாரத்தை நிலைநாட்டவும், எண்ணம், கருத்து வெளியீடு, நம்பிக்கை ஆகியவற்றில் முழுமையான சுதந்திரத்தை அளிக்கவும், எந்த நிலையிலும் சமத்துவத்தை நிறுத்தவும், சகோதரத்துவத்தை வளர்க்கவும், இந்திய மக்கள் தங்களுக்கு தாங்களே அரசமைப்பை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் குற்றவியல் சட்டங்கள், உரிமையியல் சட்டங்கள் என சட்டங்கள் உள்ளன. சட்டப்படி நடந்தால் யாவும் நலமே! ஆனால் சட்டப்படியாக எல்லாம் நடக்கின்றனவா? சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? இல்லை என்றுதானே சொல்ல வேண்டி உள்ளது. எத்தனை சட்ட மீறல்களும், சட்ட அத்துமீறல்களும், அடாவடித்தனமும் அட்டூழியங்களும் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றன? 

குற்றத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் காவல் நிலையத்தில் சென்று அச்சமில்லாமல் புகார் கொடுக்க முடியவில்லை. ஒரு புகாரை பதிவு செய்வதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது. சட்டங்களும் நீதிமன்ற தீர்ப்புகளும் குற்றவாளிகளுக்கும் நிறைய பாதுகாப்பு விதிமுறைகளை வகுத்துள்ளது. ஆனால் அவை அனைத்தும் எந்த அளவுக்கு மதிக்கப்படுகிறது என்பது மிகவும் கேள்விக்குறியாகும். மதிக்கப்படுவதைக் காட்டிலும் மிதிக்கப்படுவதே மிகுதியாக உள்ளது. இதை ஏதோ கற்பனையில் நான் சொல்லவில்லை.இதுதான் உண்மையான எதார்த்தம் என்பது நமது நாட்டில் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். 

குற்றங்களில் இருந்து மக்களைக் காக்கும் மகத்தான பொறுப்பை வகிக்கிறது காவல்துறை! குற்றம் நடந்து விட்டால் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க காவல்துறை பாடுபடுகிறது! காவல்துறையின் கடமை போற்றுதலுக்குரியது என்பதில் மாற்றுக்கருத்து எதுவுமில்லை! காவல்துறையில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என நேர்மையாய் உண்மையாய் உழைப்பவர்கள் நிறையவே உள்ளனர். இருந்தாலும் அவர்கள் கடலில் கரைத்த பெருங்காயம் போல் உள்ளனர்! 

காவல்துறை மக்களின் நண்பர்கள் என்கிறார்கள்! ஆனால் புகார்தாரர்கள் குற்றவாளிகள் இரு தரப்பினருமே வெயிலில் வாடும் புழுவாகவே வேதனைப்படுகிறார்கள்!ஏற்கத்தக்க வழக்கிற்கு உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று எத்தனையோ தீர்ப்புகள் ஏற்பட்ட பிறகு வழக்கு பதிவு செய்ய மக்கள் படும் இன்னல் இன்னும் மாறவில்லை! குற்றம் சாட்டப்பட்டவர்களையும் கண்ணியமாக மதித்து நடத்த வேண்டும் என்று எத்தனை தீர்ப்புகள் எழுதப்பட்டு விட்ட போதிலும் காவல் நிலைய மரணங்களும் காவல் நிலைய அவலங்களும் நாளும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன! 

எல்லா சட்ட மீறல்களும் இங்கே இருந்துதான் நடக்கின்றன. இங்குமட்டும் எல்லாம் சரியாக நடந்தால் சட்ட மீறல்கள் எங்குமே நடக்காது! அப்படி நடந்தாலும் சட்டம் அதன் கடமையைச் செய்யும்! சட்டப்படி தண்டனையும் கிடைக்கும்! எவ்வளவு பெரிய வசதி படைத்தவராக இருந்தாலும், அதிகாரியாக இருந்தாலும் ஆட்சியாளராக இருந்தாலும் எவரையுமே குற்றம் செய்தால் வழக்கு பதிவு செய்து கைது செய்யும் அதிகாரி காவல்துறையிடம் தான் உள்ளார். அத்தகைய அதிகாரம் படைத்த காவல்துறை தனது கடமையை சரிவர செய்யாமல் சட்டத்தின் ஆட்சி சீர் குலைவதற்கு ஏதுவாக செயல்பட்டது. ஏதோ காரணத்திற்காக உண்மையான குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளும்படி வழக்கை கட்டமைப்பதும், நிரபராதிகள் மீது பொய் வழக்கு போடுவது காவல்துறையில் நடக்கும் சாதாரண விஷயமாக உள்ளது. 

அந்த ஏதோ காரணம் என்னவென்று உங்களுக்கு எல்லோருக்கும் தெரியும்! அந்த ஏதோ ஒன்று காவல்துறையை மட்டும் கெடுக்கவில்லை. அரசு எந்திரத்தையும் சீர்குலைத்து விட்டது. அரசு அலுவலர்களும் காவல்துறையும் தான் சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய சட்டப்படியான ஆட்சியை உருவாக்க வேண்டிய பொறுப்பாளர்கள்.ஆனால் வேலியே பயிரை மெய்ப்பது போல் காவல்துறையினரும் அரசு அலுவலர்களும் மக்கள் நலனையும், சட்டத்தின் ஆட்சியையும் புறக்கணித்து, சுயநலத்தால் சட்டத்துக்கும் சமுதாயத்திற்கும் விரோதமான செயல்களைச் செய்கிறார்கள். 

சட்டத்துக்கு புறம்பாக நடப்பவர்களை தண்டித்து சட்டத்தின் ஆட்சியை உருவாக்க வேண்டிய பொறுப்பில் நீதிமன்றங்கள் உள்ளன. ஆனால் நீதிமன்றங்களும் அதனை செவ்வனே செய்ய முடிகின்றனவா? நாட்டில் தலைவிரித்தாடும் இலஞ்ச ஊழல்கள் , நீதிமன்றத்தால் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்த முடியவில்லை என்பதைத்தானே எடுத்துக்காட்டுகிறது. நீதிமன்றங்கள் சாட்சிய ஆதாரங்களின் அடிப்படையில்தான் முடிவு செய்கின்றன. சட்டத்தை நிலைநாட்டக் கூடிய அளவிற்கு சாட்சிய ஆதாரங்களை முன்வைக்க வேண்டியதும் காவல்துறையின் கடமையாக உள்ளது. காவல்துறையின் தவறுகள் நீதியையும் நிலைகுலையச் செய்கின்றன.

காவல்துறையும் அரசு அலுவலர்களும் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதில் தவறுகிறார்கள். நீதிமன்றத்தாலும் அதனை சரி செய்ய இயலவில்லை என்பது வெள்ளிடை மலையாக உள்ளது. காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் இடையே எல்லாவற்றிலும் சரிப்படுத்தக் கூடிய இடத்தில் ஒருவர் இருக்கிறார். அவர்தான் வழக்கறிஞர். நான் ஒரு வழக்கறிஞரை மட்டும் சொல்லவில்லை. வழக்கறிஞர் சமுதாயத்தைச் சொல்லுகின்றேன். வழக்கறிஞர்கள் நினைத்தால் யார் தவறு செய்தாலும் அதனை திருத்த சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்த முடியும்! நிச்சயமாக முடியும்! 

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முன்னணி படையாக விளங்கியவர்கள் வழக்கறிஞர்கள் தான்! சட்டம் படித்த மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு அண்ணல் அம்பேத்கார் போன்ற பலரும் சட்டம் படித்தவர்கள்.சட்டம் படித்தவர்கள் ஒன்றாக நின்று ஒருங்கிணைந்த செயல்பட்டால் எதையும் உருவாக்க முடியும். சட்டம் அறியாதவர்களுக்கு சட்டம் படித்தவர்கள் தான் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். தலைவர்களாக வழிநடத்த வேண்டும்! சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதில் வழக்கறிஞர்கள் தங்களுக்குள்ள பொறுப்பை, கடமையை உணர வேண்டும். சட்டம் படித்தவர்கள், சட்டம் அறிந்தவர்கள், சட்டத்தால் வாழ்வவர்கள் சட்டத்துக்கு புறம்பாக ஒரு செயல் நடக்கும் போது அதை தட்டிக் கேட்க வேண்டாமா? சட்டத்துக்கு புறம்பான செயல்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்து சமூக உணர்வோடு செயல்படுவார்கள் என்ற அச்சம் இருந்தால் காவல்துறை கட்டுமீறி செயல்படுமா? அரசு அலுவலர்கள் அத்துமீறி செயல்படுவார்களா? 

சட்டம் ஒரு இருட்டறை அதில் உள்ள வழக்கறிஞரின் வாதம் விளக்கு என்று அறிஞர் அண்ணா அவர்கள் சொல்லி உள்ளார்.அந்த விளக்கு சுடர் விட்டு எறிந்தால் சட்டத்தின் ஆட்சியை கவ்வி விழுங்கும் இருட்டு பரவுமா? சட்டம் அறிந்த வழக்கறிஞர்கள் தங்களுடைய வாழ்க்கையை மட்டும் பார்த்துக்கொண்டால் போதும் என்று சுயநலவாதிகளாக ஒதுங்கிக்கொள்ளக்கூடாது. சமுதாய நலனை பாதுகாக்க வேண்டிய வழக்கறிஞர்களுக்கு மிகுந்த பொறுப்பு உள்ளது. வழக்கறிஞர்களும் சமுதாயத்தில் ஒரு அங்கந்தான். சமுதாயப் பாதிப்பு வழக்கறிஞர்களையும் பாதிக்கத்தான் செய்யும். அந்த பாதிப்பில் இருந்து சமுதாயத்தை மீட்க வேண்டிய கடமையும் வழக்கறிஞர்களுக்கு தான் உள்ளது. ஆதலால் சமுதாயத்தை பாதுகாக்கும், சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்தும் முன்னணி படையாக வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும். 

காவல்துறையின் அத்துமீறல்களுக்கு கடிவாளம் போடும் தீர்ப்புகளை எழுதுவதற்கு சமூகப் பொறுப்பு மிக்க வழக்கறிஞர்கள் தான் காரணமாக இருக்கிறார்கள்!எத்தனையோ தீர்ப்புகள் வந்தும் இன்னும் மாறாத நிலை நிலவுவதால் அதனை மாற்றுகின்ற அதிக பொறுப்பு மிக்க வழக்கறிஞர்களையும் சட்ட ஆர்வலர்களையும் ஒருங்கிணைக்க வேண்டியது விடியல் சட்ட சேவை மையம் போன்ற அமைப்புகளின் தேவையாக உள்ளது. சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சட்ட ஆலோசனைகளை வழங்குதல், தேவையான சட்ட உதவிகளை செய்திட சமூகப் பொறுப்பு மிக்க மனிதநேயமிக்க வழக்கறிஞர்களும் சட்ட ஆர்வலர்களும் வரவேண்டும் என்ற மக்களின் தீராத எதிர்பார்ப்புக்கு விடையாக விடியல் சட்ட சேவை மையம் வந்துள்ளது என இங்கு இத்தனை பேர் வந்து கூடியுள்ளனர். 

சட்டத்தால் யுத்தம் செய் என்று மேனாள் நீதியரசர் மாண்புமிகு கே. சந்துரு அவர்கள் நூல் ஒன்று எழுதியுள்ளார். யுத்தம் என்பதே இந்த பூமியில் இருந்து தொலைந்து விட வேண்டும் என்பது எனது விருப்பம்! ஆதலால் நாம் சட்டத்தால் யுத்தம் செய்ய வேண்டாம்!சத்தம் செய்ய வேண்டாம்! ரத்தம் சிந்தவும் வேண்டாம்! வேறு என்ன செய்யலாம்? நாம் சட்டத்தால் சுத்தம் செய்வோம்! அழுக்கு படிந்த காவல்துறையையும் அரசு அலுவலகங்களையும் சுத்தம் செய்வோம்! அவர்களை சுத்தமாக இருங்கள் என்று சொல்லுவோம்! அவர்கள் சுத்தமாக இல்லை என்றால் நாம் சுத்தம் செய்வோம்! இதுதான் விடியல் சட்ட சேவை மையத்தின் இலக்கு! இதுதான் விடியல் சட்ட சேவை மையத்தின் பணிகள்! இதுதான் விடியல் சட்ட சேவை மையத்தின் தேவை! 

'பெயரைக் கேட்டாலே அதிருதில்ல' என்பது போல் விடியல் சட்ட சேவை மையம் என்ற பெயரைக் கேட்டாலே அதிர வேண்டும்! விடியல் சட்ட சேவை மையத்தை நினைத்தாலே சுத்தம் தானாக வரவேண்டும்! அது எப்படி வரும் என்று நினைக்கிறீர்களா?சட்டத்தின் ஆட்சி வேண்டும் என்று, சமூக நலன் காக்கப்பட வேண்டும் என்று நீங்கள் எல்லாம் விடியல் சட்ட சேவை மையத்தை நம்பிக்கையோடு ஆதரித்தால் நிச்சயமாக எல்லாம் நடக்கும்! நாமெல்லாம் ஒருங்கிணைய வேண்டும்! நாம் நினைக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று நாமெல்லாம் ஒருங்கிணைய வேண்டும்! 

நல்லோர்கள் எல்லாம் நம்மிடம் வந்தால் நாம் நினைக்கும் காரியம் நடக்காதா என்ன? விடியல் சட்ட சேவை மையத்தின் நோக்கம் நல்லுள்ளம் படைத்த உயர் அலுவலர்களைக் கவர்ந்திழுக்கும். விடியல் சட்ட சேவை மையத்தின் நோக்கத்தை இன்னும் எத்தனையோ நீதிபதிகள் முன்னெடுத்துச் செல்கின்றனர்! எத்தனையோ காவல்துறை அதிகாரிகளும் கூட மக்கள் நலனுக்கு பாடுபட காத்திருக்கிறார்கள்! மாவட்ட ஆட்சியர்கள் பலரும் ஆதரவு கரம் நீட்டி வருவார்கள்! இப்போது இது ஆச்சரியமாக இருக்கலாம்!இதைவிட பெரிய பெரிய ஆச்சிரியங்களை கூட அரங்கேற்றுவதற்கு காலம் கமுக்கமாய் காத்திருக்கலாம்! ஆதலால் இன்று கோவையில் தொடங்கும் விடியல் சட்ட மையத்தை மாநிலம் முழுவதும் மாவட்டங்கள் தோறும் தொடங்கிடுவோம்! சட்ட சேவை செய்திடுவோம்! சமூக நலன் காத்திடுவோம்! 

 - கு. கருணாநிதி எம்.ஏ., எம்.எல்., தனி நடுவர், மேனாள் மாவட்ட நீதிபதி, மாநில அமைப்பாளர், விடியல் சட்ட சேவை மையம், நாமக்கல்.

Comments